தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு 4000 முதல் 4500 வரை சிகிச்சைக்கு வருகிறார்கள். மேலும் இந்த நோயின் அறிகுறிகள் என்ன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மெட்ராஸ் ஐ குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்ட பின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், செப்டம்பர் தொடங்கி டிசம்பர் முதல் வாரம் வரையிலும் மெட்ராஸ் ஐ என்று சொல்லக்கூடிய கண் நோய் பரவல் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து மெட்ராஸ் ஐ பாதிப்பு கூடுதலாகி வருகிறது.
சென்னையில் கண் நோய்க்கான மருத்துவ மையங்கள் அரசின் சார்பில் 10 இடங்கள் இருக்கிறது. எழும்பூர் கண் மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் உள்ளிட்ட பத்து இடங்களில் கண் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 10 இடங்களில் நாளொன்றுக்கு 80 -100 பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு 4000 முதல் 4500 வரை சிகிச்சைக்கு வருகிறார்கள். இதுவரையும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் 1.5 லட்சம் பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது ஆனால் தற்போது வரையிலும் ஒருவருக்கு கூட கண்பார்வை இழப்பு ஏற்படவில்லை என்றார். மேலும், சேலம் , தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிமாக உள்ளது என தெரிவித்தார். மேலும், வைரஸ் தாக்குதலில் மூலமாக மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுகிறது.
மெட்ராஸ் ஐ அறிகுறிகள்: கண்ணில் உறுத்தல், சிவப்பு நிறமாக கண் மாறுதல், அதிக கண்ணீர் சுரக்கும், கண் அரிப்பு ஏற்படும், கண் வீங்குதல் இருக்கும், அடிக்கடி அழுக்கு சேரும், இமைகள் ஒட்டிக்கொள்ளும் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.
மேலும் பேசிய அவர், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்களை கையினால் தொடக்கூடாது அப்படி தொட்டு விட்டு அருகே இருப்பவர்களை தொட்டால் அவர்களுக்கும் இந்த நோய் பரவும், இது எளிதில் பரவக்கூடிய நோய் பாதிப்பாகும் எனவே நோய் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று, நான்கு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நோய் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி, அலுவலகம் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் சுய சிகிச்சை செய்யக்கூடாது. முறையான கண் மருத்துவர் அணுகி அவரின் பரிந்துரையின் பேரில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை போட்டுக் கொள்ளக்கூடாது. வீட்டில் ஒருவருக்கு கண் நோய் பாதிப்பு ஏற்பட்டால் அந்த கண் நோய் உள்ளவர்கள் பயன்படுத்திய மருந்தை அந்த வீட்டில் உள்ள வேறு ஒருவருக்கு கண் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மீதமுள்ள அந்த மருந்தை பயன்படுத்தக் கூடாது என்றார்.
நவம்பர் இறுதியில் இருக்கிறோம் டிசம்பர் முதல் வாரம் வரையிலும் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு இதன் நோய் பாதிப்பு நீங்கிவிடும். எழும்பூர் கண் மருத்துவமனைக்கு தினமும் 600 முதல் 700 நோயாளிகள் மெட்ராஸ் ஐ மட்டுமல்லது வேறு கண் பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள். வரக்கூடிய நோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள 90 மருத்துவமனைகளிலும் இது போன்ற விழிப்புணர்வு பதாகைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் வைக்கப்படும் என கூறினார்.
மெட்ராஸ் ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை நிச்சயமாக பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் மூன்று நான்கு நாட்கள் மட்டுமே கூடுதல் பாதிப்பு ஏற்படுத்தும். மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு வழங்கப்படும் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. கண் மருத்துவத்தைப் பொறுத்தவரையில் போதுமான மருந்துகள் கை இருப்பில் உள்ளது. பாட்டி வைத்தியம் என்பது ஒரு காலத்தில் பொருந்தியது தற்பொழுது அப்படி இல்லை வைரஸ் பாதிப்பு என்பது உருமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது. பாட்டி வைத்தியத்தில் நம்பிக்கை இருந்தாலும் அது எல்லாம் தவிர்த்து விட்டு தற்பொழுது இருக்கக்கூடிய மருந்துகளை கையாள்வது நல்லது. மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது 100 சதவீதம் அவசியம் என்றார்.
சமூக இடைவெளியை பின்பற்றி எழும்பூர் கண் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த வருகிறார்கள். அனைத்து கண் மருத்துவமனைகளிலும் இதை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் எம்ஆர்பி கலி பணியிடங்கள் நிரப்பப்படும், அதன் பிறகு எங்கெங்கெல்லாம் மருத்துவ பணியிடங்கள் காலியாக இருக்கிறதோ அதற்கும் மருத்துவ பணியாளர்கள் நிறுவப்படும் என்று கூறினார்.
பிரியா மரணம் தொடர்பான கேள்விக்கு: மருத்துவர்களின் சிகிச்சையில் எந்த குறைவும் இல்லை.. மருத்துவரின் கவனக்குறைவு தான் காரணம். மருத்துவர்களின் பெயரில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்… ஆனால் கொலை குற்றமாக்க கூடாது என்று மருத்துவர்களே தெரிவிக்கிறார்கள். 23 ஆம் தேதி 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், மாவட்ட மருத்துவமனைகள் வட்டார மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கி கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 23ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை நிபுணர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அன்றே வெளியிடப்படும் என தெரிவித்தார்.