கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதியைச் சேர்ந்தவர் கலா (35). இவர், கணவரை இழந்து தனது 9 வயது மகளுடன் தனித்து வசித்து வருகிறார். மேலும் இவர், மார்த்தாண்டம் பகுதியில் ஒரு மசாஜ் சென்டர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர் வேலைக்கு செல்வதால் வீட்டில் அவரது மகள் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருக்கும் மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் அவரை காப்பகத்தில் சேர்த்துள்ளார். கலா தனது மசாஜ் செண்டருக்கு தினசரி மேல்புறம் வழியாகத்தான் சென்றுள்ளார். அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் இவரை கிண்டல் செய்து வந்துள்ளனர். நாளடைவில் இந்த கிண்டல், கேலி தாகாத வார்த்தைகளாக மாறியுள்ளது. இதனால் அச்சமடைந்த கலா தனது பாதுகாப்பிற்காக கத்தி மற்றும் மிளகாய் பொடியை தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று அந்த வழியாக கலா செல்லும் போது ஆட்டோ ஒட்டுநர்கள் தகாத வார்த்தையில் பேசி கிண்டல் செய்து பாலியல் சீண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கலா தன்னிடம் இருந்த மிளகாய் பொடியை அவர் மீது எரிந்து தாக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அருகில் இருந்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் அதனை தடுத்து, கலாவை கூட்டாக பிடித்துள்ளனர். அவரை பலவந்தமாக பிடித்து கை கால்களை துணியால் கட்டி அருகில் இருந்த மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மின்கம்பத்திலேயே கட்டி வைத்துள்ளனர். சாலையில் சென்ற அனைவரும் பார்த்தும் கண்டுக்கொள்ளாமல் சென்றுள்ளனர். ஒருவர்கூட சென்று அப்பெண்ணை மீட்கவும் இல்லை. காப்பாற்ற முயற்சிக்கவும் இல்லை.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கலாவை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது கலா அவருக்கு நேர்ந்த சம்பவங்களை குறித்து போலீசாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்கள் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.