பட்டா மாறுதல் செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன..? பட்டா மாறுதலில் விண்ணப்பங்களில் கட்டாயம் குறிப்பிட வேண்டிய அம்சங்கள் என்னென்ன..?
எப்போதுமே சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன்னுடைய பெயருக்கு பத்திரப்பதிவு செய்துவிடுவதுடன் பட்டா மாற்றத்தையும் செய்து கொள்ள வேண்டும். முதலில், நீங்கள் வாங்கும் சொத்து, எந்த தாலுகா எல்லைக்கு உட்பட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அந்த பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
நிலத்தை வைத்திருப்பவர்கள், பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், இருப்பிட முகவரியை தெளிவாக எழுத வேண்டும். அதேபோல, பட்டா மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரங்களையும் கவனமாக குறிப்பிட வேண்டும். இதில், பிழை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதால், சர்வே எண் உள்ளிட்ட எண்களை அடித்தல் திருத்தலின்றி எழுத வேண்டும்.
அதேபோல, சொத்துக்குரிய சர்வே எண் உள்ளடக்கிய இடம் முழுமையாக வாங்கப்பட்டுள்ளதா? அல்லது சொத்தின் ஒரு பகுதி மட்டும் வாங்கப்பட்டுள்ளதா? என்பதை அறிந்து கொண்டு, அதுதொடர்பான சர்வே நம்பரை பதிவிட வேண்டும். ஒரு பகுதியை மட்டும் வாங்குவதாக இருந்தால், உட்பிரிவு சர்வே எண்ணை சரியாக நிரப்ப வேண்டும். அத்துடன் பட்டா மாறுதலுக்கு கட்டணம் செலுத்திய விவரங்களையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
சொத்துவரி செலுத்திய ரசீது, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, மின் கட்டண அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைக்க வேண்டும். சொத்தானது பாகப்பிரிவினை, செட்டில்மெண்ட், உயில் என ஏதாவது ஒரு ஆவணம் மூலம் கிடைத்திருக்கலாம். அது பற்றிய விவரத்தையும் விண்ணப்பத்துடன் இணைப்பது கட்டாயமாகும். ஆன்லைனிலும் இந்த பட்டா மாறுதலை செய்து கொள்ளலாம். இதற்கு
https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
கிரையப் பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தானப்பத்திரம், பரிவர்த்தணை பத்திரம், விடுதலை பத்திரம் போன்ற பத்திரங்களில் ஏதாவது ஒன்று இதற்கு தேவைப்படும். அதேபோல, நீங்கள் எந்த சொத்தை பட்டா மாற்ற வேண்டுமோ அந்த சொத்தினுடைய ஆவணம், அதாவது சொத்து பத்திரமும் அவசியம் தேவை. பட்டா மாற்றம் செய்ய இருக்கும் சொத்தினுடைய தாய் பத்திரமும் வேண்டும். இந்த சொத்தினுடைய கணினி சிட்டா மற்றும் வில்லங்க சான்றிதழும் தேவைப்படும்.
Read More : நீங்களும் உயில் எழுதி வைக்கப் போறீங்களா..? அப்படினா கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!