புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டுக்காடு ஊராட்சியில், இறையூர் என்ற கிராமத்தில் உள்ள வேங்கை வயல் என்ற தெருவில், சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில், அந்த மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக குடிநீர் நீர்த்தேக்க தொட்டி ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில்தான், சென்ற வருடம் அந்த பகுதியைச் சேர்ந்த 5 சிறுவர், சிறுமிகளுக்கு திடீரென்று உடல்நல குறைவு உண்டானது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் சிகிச்சைக்காக, புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இவர்கள் குடித்த குடிநீரில் ஏதாவது பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறினர்.
இதன் பின்னர், அந்தப் பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டியை அந்த பகுதி மக்கள் ஆய்வு செய்தபோது, அந்த குடிநீரில் மலம் கலந்திருக்கிறது என்ற விவரம் தெரிய வந்தது. குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்டு இருந்த இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாது, தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனை தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணையை ஆரம்பித்தனர்.
இதற்கு நடுவே, இந்த வழக்கு சென்ற ஜனவரி மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர், குடிநீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த வழக்கு குறித்து 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும், இதன் காரணமாக, குற்றவாளிகளை மிக எளிதாக அடையாளம் காண இயலும் என்று சிபிசிஐடி நீதிமன்றத்திற்கு சென்றது. நீதிமன்றமும் இதற்கு அனுமதி வழங்கிய சூழ்நிலையில், தற்சமயம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரையில், இந்த வழக்கில் நான்கு சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இன்று ஒரு சிறுவன் உட்பட, ஆறு பேருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட உள்ளது.