22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு அர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்சும் இறுதி ஆட்டத்தில் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் ஆதிக்கமே இருந்தது. 23வது நிமிடத்தில் முதல் கோல், 36வது நிமிடத்தில் 2வது கோல் என 2-0 என்று ஆதிக்கம் செலுத்தியது அர்ஜென்டினா.
உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் முதல் பாதியில் 1 கோல் கூட அடிக்காத முதல் அணி பிரான்சு என்ற போதிலும், நம்பிக்கையை இழக்காமல் போராடியது, 80வது நிமிடத்தில் பெனால்டி ஷாட் மூலம் கோல் அடித்தார் பிரான்சு நம்பிக்கை வீரர் எம்பாப்பே, அடுத்த நிமிடமே இரண்டாவது கோலும் அடித்து அர்ஜென்டினா அணியை பதறவைத்தார். வழக்கமான 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
இதையடுத்து தலா 15 நிமிடங்கள் வீதம் மொத்தம் 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. கூடுதலான 30 நிமிடத்திலும் 3-3 என்ற கணக்கில் சமன் ஆனதால் போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி கோப்பையை தட்டி சென்றது. அர்ஜென்டினா அணி உலககோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் வென்று இருந்தது. மகுடம் சூடிய அர்ஜென்டினாவுக்கு ரூ.342 கோடியும், 2வது இடத்தை பிடித்த பிரான்சுக்கு ரூ.244 கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.
அதே சமயம் ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை மெஸ்சி தட்டிச் சென்றார். சிறந்த இளம் வீரருக்கான விருதை அர்ஜென்டினாவின் மிட் பீல்டர் என்சோ பெர்னாண்டஸ் வென்றார், சிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் க்ளோவ் விருதை எமி மார்டினெஸ் வென்றார்.
இந்நிலையில் ட்விட்டரில் 7 வருடத்திற்கு முன் ரசிகர் போட்ட ஒரு பதிவு தற்போது வைராலகி வருகிறது, 2022 ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பையை மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா அணி தட்டி செல்லும் எனவும் மெஸ்சி சிறந்த வீரராக விளங்குவார், என்று 2015 ஆம் ஆண்டே “ஜோஸ் மிகுவல் போலன்கோ” என்ற மெஸ்சியின் ரசிகர் போட்ட பதிவு தான் தற்போது அப்படியே நடந்துள்ளது. 2014 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஜெர்மனியிடம் தோல்வியடைந்த நிலையில் அப்போதே அந்த ரசிகர் இந்த பதிவை போட்டுள்ளார். இந்த பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.