சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்ற செய்திகளுக்கு மத்தியில், விளையாட்டையும் அரசியலையும் கலந்து பேசுவது சரியல்ல என்று RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானில் போட்டியை நடத்தினால் நாங்கள் பங்கேற்போம் என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கூறி வந்தது. ஆனால் எங்கள் நாட்டில்தான் அனைத்து போட்டிகளும் நடத்தப்படும் என பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்தது. அத்துடன் தொடருக்கான வரைவு அட்டவணையை வெளியிட்டது.
இதனால் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என இந்திய அணி, தனது முடிவை ஐ.சி.சி.க்கு கடிதம் மூலம் தெரிவித்தது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்ற தகவல் குறித்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், “விளையாட்டில் அரசியலை கொண்டு வருவது நல்லதல்ல. ஒலிம்பிக்கில் அனைவரும் பங்கேற்பது இல்லையா? ஏன் இந்தியா பாகிஸ்தான் செல்லக்கூடாது? கண்டிப்பாக செல்ல வேண்டும். மற்ற அணிகளும் இந்தியாவுக்கு வர வேண்டும். வீரர்கள் விளையாடுவதற்கு அண்டை நாட்டிற்குச் செல்வதில் ஏன் ஆட்சேபனை? பிரதமர் நரேந்திர மோடி பிரியாணி சாப்பிட பாகிஸ்தானுக்குச் செல்லலாம் என்றால், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஒரு முக்கியமான போட்டிக்காக பாகிஸ்தானுக்குச் செல்வது நல்லதுதானே? இது ஏன் நல்லதல்ல?” என்றார். தேஜஸ்வி யாதவ் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி கூறுகையில், “எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எது சிறந்ததோ அதையே நான் செய்வேன். அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்தியா பாகிஸ்தான் வரவில்லை என்றால் நாங்களும் இந்தியா வரமாட்டோம். விளையாடமாட்டோம். இந்திய அணி எழுத்துப்பூர்வமாக எங்களிடம் அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.