மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூரில் உள்ள வீடு உட்பட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கரூர், திருப்பூர், கோவை ஆகிய நகரங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அமைச்சரின் நண்பர்கள், சகோதரர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.
இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் மட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களிலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களிலும் சோதனையும் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை நடைபெறுவதால் திமுக தொண்டர்கள் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்கள் அமைச்சரின் வீட்டருகே குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மதுபான கடைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக சென்ற போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை. தம்பி மற்றும் அவருடைய நண்பர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. வருமான வரித்துறை சோதனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்திக்கிறேன்” என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.