திராவிட மாடலில் உள்ள ‘மாடல்’ என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது..
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களின் பலகையில் தூய தமிழில் பெயர் எழுத வேண்டும் என்று உத்தரவிடக்கோரி மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள் “ தமிழ்நாடு அரசின் அரசாணையின் படி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர் வைக்காமல், ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் வைத்துள்ள நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..” என்று கேள்வி எழுப்பினர்..
மேலும் அதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உத்தரவிடு வழக்கு விசாரணையை பிப்ரவரி 16-ம் தேதி ஒத்திவைத்தனர்.. தொடர்ந்து பேசிய நீதிபதிகள் “ தற்போது திராவிட மாடல் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது.. இதில் மாடல் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன..? என கேள்வி எழுப்பினர்.. இந்த முக்கியமான சொல்லாடலை ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகின்றனர்..? முற்றிலும் தமிழிலேயே பயன்படுத்தலாமே.. தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் பாடுபட வேண்டும்.” என்று கருத்து தெரிவித்தனர்..