கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் குழு மேல் குழு அமைத்து எந்த பயனுமில்லை என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகம் தாக்குதலில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த அதிமுகவைச் சேர்ந்த 14 பேர் ஜாமீனில் இன்று வெளியே வந்தனர். அவர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியினருடன் வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் குழு மேல் குழு அமைத்து எந்த பயனும் இல்லை. சிபிஐ விசாரணை வேண்டும். தாயின் நியாயமான வேதனை உணர்வு கேள்விக்கு பதில் ஆளும் அரசால் சொல்ல முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு பாழாய் போகும். கலவரத்திற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
நிதிஅமைச்சர் மக்கள் உணர்வை பிரதிபலிக்கக் கூடியவராக இருக்க வேண்டும். வருமானம் வந்தால் போதும் என்ற வகையில் இருந்தால் மக்கள் நலன் காக்கும் அரசாக இது அமையாது. விடியா அரசு ரெட்டை வேஷம் போடுகிறது. கார்ப்பரேட்டில் இருந்து வந்த நிதி அமைச்சருக்கு மக்கள் நலன் தெரியாது. நாங்கள் தான் அதிமுக. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கணக்கு வழக்குகளை கையாள்வார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. திமுக அரசு மக்களுக்கு சுமையை சுமத்துகிறது. மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு செய்யவில்லை. மின் கட்டணத்தை ஏற்றி உள்ளனர். வரும் 25ஆம் தேதி மின்கட்டணம், சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றார்,