கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தில் ஏற்பட்ட மொத்த இழப்பீடுகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். இதையடுத்து, மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்ற நிலையில், கடந்த 17ஆம் தேதி கலவரமாக வெடித்தது. இதில், பள்ளிகள், வாகனங்கள், கணினிகள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டன. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளி வளாகத்தின் உள்ளே, வெளியே மற்றும் சின்ன சேலம் பாரதி பள்ளி போன்ற இடங்களில் நடைபெற்ற கலவரம் தொடர்பான 3 வழக்குகளை சிறப்பு புலனய்வு குழு விசாரிக்கிறது. அதன்முடிவில்தான் சேலம் சரக ஐஜி பிரவீன் குமார் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில், சம்பவத்தன்று மொத்தம் 3 இடங்களில் நடைபெற்ற கலவரங்களில் ரூ.3,45,83,072 அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* காவல்துறையின் 15 வாகனங்கள், தீயணைப்புத் துறையின் 3 வாகனங்கள், காவல்துறையினரின் 51 வாகனங்கள் இழப்பின் மதிப்பு – ரூ. 95,46,810
* மின் வாரிய இழப்பின் மதிப்பு – ரூ. 65,885
* வேளாண்மை துறை மரங்கள் இழப்பின் மதிப்பு – ரூ. 1,27,666
* இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இழப்பு – ரூ. 56,775
* பள்ளியின் சேதம்: கணினி & மின்னனு உபகரணங்கள் – ரூ. 1.50 கோடி, ஆர்.ஓ. தண்ணீர் வசதி – ரூ. 5.96 லட்சம், சூரிய ஒளி மின் வசதி திட்டம் – ரூ. 35 லட்சம், யுபிஎஸ் & பேட்டரி – ரூ. 2,53,000, பிவிசி கதவுகள், சன்னல்கள் – ரூ. 35,19,226, சூரிய ஒளி வாட்டர் ஹீட்டர் – ரூ. 2,17,710, சிசிடிவி – ரூ. 17 லட்சம்

இதுதொடர்பாக சிசிடிவி பதிவுகள், ஊடக காட்சிகள், பொதுமக்கள் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் மூலம் 150 புகைப்படங்கள் மற்றும் 954 வீடியோக்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. தவறான செய்தி பகிர்ந்ததாக 63 யூடியூப் இணைப்புகளில் 59 செய்திகளும், 31 ட்விட்டர் பதிவுகளில் 7 பதிவுகளும், 25 ஃபேஸ்புக் பதிவுகளில் 23 பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கில் இதுவரை 3 சிறார்கள் உள்ளிட்ட 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி வாகனங்களில் டிராக்டரை மோதியதாக பங்காரத்தை சேர்ந்த ஜெயவேல் கண்டறியப்பட்டதாகவும், அவர் தலைமறைவாகி, பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.