வெள்ளிக்கோளை ஆராய்வதற்கான சுக்ரயான் திட்டம் தயார் நிலையில் உள்ளதாக, இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அடுத்தடுத்து மேற்கொள்ளும் ஆராய்ச்சி பணிகள், சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பை உயர்த்தி வருகின்றன. திட்டமிட்டபடி, சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டது. தொடர்ந்து, ஆதித்யா எல்1 விண்கலமும் தனது பயணத்தை திட்டமிட்டபடி மேற்கொண்டுள்ளது. அடுத்தாண்டு இந்த விண்கலம் தனது ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சூரிய மண்டலத்தில் உள்ள பிரகாசமான கிரகமான கோளான வெள்ளியை ஆராய்வதற்காக, சுக்ரயான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இதில் இடம்பெற உள்ள பே-லோட்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் உரையாற்றிய அவர் இந்த விவரங்களை தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் நோக்கம் தொடர்பாக பேசிய சோம்நாத், “வெள்ளிக்கோள் மிகவும் சுவாரஸ்யமானது. அதற்கும் வளிமண்டலம் உள்ளது. அது மிகவும் அடர்த்தியானதாக உள்ளது. இதனால், அதன் மேற்பரப்பை ஊடுருவுவது அவ்வளவு எளிதானது அல்ல. வெள்ளிக்கோளை படிப்பது நமது சொந்த கிரகத்தின் எதிர்காலத்தைப் பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கும். பூமி ஒரு நாள் வெள்ளி கோளாக இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமி தனது குணாதிசயங்களை மாற்றிக் கொள்ளலாம். பூமி முன்பு இப்படி இருந்ததில்லை. நீண்ட காலத்திற்கு முன்பு அது வாழத் தகுதியான இடமாக இல்லை” என கூறினார். இதனால் அடுத்த சில வருடங்களில் இஸ்ரோவின் சுக்ரயான் திட்டம் செயல்வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு வெள்ளிக் கோளில் லேண்டரை தரையிறக்கிய ஒரே நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது. ஆனால், அந்த லேண்டர் ஒரு சில விநாடிகள் மட்டுமே செயல்பட்டு தகவல்களை சேகரித்தது. அதைதொடர்ந்து, 2030-களில் வெள்ளிகோளை ஆர்பிட்டர் மிஷன் மூலம் ஆராய நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.