தமிழக ஆளுநருடன், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, ”நம்முடைய நாடு முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை பெருமிதமாக கொண்டாட தேசியக்கொடியை நம் இல்லங்களில் ஏற்றுகிறோம். ஜம்மு-காஷ்மீரில் நெய்யப்பட்ட தேசியக்கொடி வரவழைக்கப்பட்டு, பாஜக அலுவலகத்தில் ஏற்றப்படும். ஒரு சில தலைவர்கள் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றுவதைக்கூட அரசியலாக்குகிறார்கள். அவர்களின் சிந்தனை எந்த அளவுக்கு பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான மனிதர்களில் ஒருவர் ரஜினிகாந்த. பல கோடி மக்களின் அன்பைப் பெற்றவர். தமிழ்நாட்டின் நலனுக்காக எப்போதும் குரல் கொடுத்து வருபவர். ஆளுநர் பல இடங்களில் பல மனிதர்களைச் சந்தித்து வருகிறார். ஆளுநர்-ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. ஆளுநர் பலரையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளும், திமுகவின் பி.டீமாகச் செயல்படுகிற, அந்தக் கட்சி கொடுக்கிற ஆக்ஸிஜனை வைத்துக்கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிற சில கட்சித் தலைவர்கள், தங்களின் இருப்பைக் காட்டுவதற்காக ரஜினியை விமர்சித்துள்ளனர். `நான் அரசியல் பேசினேன்!’ என்று கூறுவது, சமுதாயத்தில் நடக்கக்கூடிய விஷயங்களைக் குறித்துப் பேசினோம் என்றுதான் அர்த்தம்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.