ஆசியக்கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. இப்போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்து வெளியேறினர். அடுத்ததாக விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் இறங்கினர். அப்போது திடீரென மழை குறுக்கிட்டதால், ரிசர்வ் டே-யாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்திய அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 24.1 ஓவரிலிருந்து ஆட்டம் மீண்டும் தொடங்கியது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.எல்.ராகுல் 100 பந்துகளில் சதமடித்து அசத்த, கோலியும் சதமடித்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 32 ஓவரில் 128 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதுகுறித்து பாகிஸ்தான் அணி கேப்டர்ன் பாபர் அசாம் கூறுகையில், ”வானிலை மாற்றங்களை நம்மால் மாற்ற முடியாது. எங்களால் முடிந்தவரை இந்த போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சித்தோம். ஆனால் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பிவிட்டோம். இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் எங்கள் பந்துவீச்சாளர்களை சமாளிக்க தேவையான திட்டங்களுடன் வந்து அதை சரியாகவும் செயல்படுத்தி இந்தியாவுக்கு மிக சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.
எங்களின் தோல்விக்கு இந்திய அணியின் துவக்க வீரர்கள் தான் மிக முக்கிய காரணம். அவர்கள் அமைத்து கொடுத்த அடித்தளத்தை விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் சிறப்பாக பயன்படுத்திவிட்டனர். பந்துவீச்சில் முதல் 10 ஓவர்களை முகமது சிராஜ் மற்றும் பும்ராஹ் ஆகியோர் மிக சிறப்பாக வீசினர். பேட்டிங்கில் நாங்கள் மிக மிக மோசமாக செயல்பட்டோம் என்பதே உண்மை” என்று தெரிவித்தார்.