தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு செப்.23ஆம் தேதி நடைபெறவிருந்ததாக கூறப்பட்ட நிலையில், தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், கடந்த மாதம் 22ஆம் தேதி கட்சியின் கொடி, பாடலை அறிமுகம் செய்து வைத்தார். கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடிக்கான விளக்கத்தை முதல் மாநாட்டில் வெளியிடுவதாகவும் தெரிவித்தார். பெருவாரியான வாக்காளர்களை கவரும் வகையில், கட்சியின் கொள்கைகள் அமைய வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். இதற்காக, பலரிடமும் கருத்து கேட்கப்பட்டு கட்சியின் கொள்கைகளை அவர் வகுத்து வருவதாக கூறப்படுஇறது.
இதற்கிடையே, மாநாடு நடத்துவதற்கு இடம் தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்த விஜய், இறுதியாக விக்கிரவாண்டியை தேர்வு செய்தார். அங்கு செப்.23ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி கோரி காவல்துறையில் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்தார். இதைத்தொடர்ந்து, பல்வேறு நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி வழங்கியது. ஆனாலும், திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி மாநாடு நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ”மாநாட்டுக்கு இடையூறு வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால், பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும். பொதுச்செயலாளர் ஆனந்த் ஒருவரால் மட்டுமே எல்லா வேலைகளையும் பார்க்க முடியாது. எனவே, சில முக்கிய நிர்வாகிகளை ஒருங்கிணைத்து மாநாட்டு பணிக்காக தனி குழு அமைத்திருக்க வேண்டும்.
வேலையை பகிர்ந்து கொடுத்திருக்க வேண்டும். இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை எந்த பணியும் ஆரம்பிக்கவில்லை. இதுபற்றி கேட்டால், ”தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எந்த திட்டமிடலும் வேண்டாம். அதுவரை நிர்வாகிகள், தொண்டர்கள் காத்திருங்கள்” என்கின்றனர். இதனால், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
மாநாடு அக்டோபருக்கு தள்ளி வைக்கப்படுவதாக ஒரு தரப்பினரும், மழைக்காலம் நெருங்குவதால், 2025 ஜனவரியில் நடத்த தலைமை திட்டமிட்டு வருவதாக ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக முக்கிய நிர்வாகிகளிடம் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
Read More : புரட்டாசியில் வரும் இந்த நாளை மட்டும் மறந்துறாதீங்க..!! ஏராளமான நன்மைகள் கிடைக்கும்..!!