கன்னியாகுமரி மாவட்டம் மீனச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சோமு (45). இவர், மனைவி பெனிலா, மகன்கள் மற்றும் தாயார் சரோஜினி உடன் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சோமு, அவரது தாய் சரோஜினியும் சேர்ந்து மனைவி பெனிலாவுக்கு தெரியாமல், தாங்கள் வசித்து வரும் கான்க்ரீட் வீட்டை மணிகண்டன் என்பவருக்கு ரூ.12 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால், சில நாட்களுக்கு பிறகு தற்போது வீட்டை விற்பனை செய்தது சோமுவின் மனைவி பெனிலாவுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், சோமு மற்றும் வீட்டை வாங்கிய மணிகண்டன் இருவரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்தனர். அப்போது, மனைவிக்கு தெரியாமல் வீட்டை விற்றது தவறு. எனவே, பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
இதற்கு ஒப்புக்கொண்ட மணிகண்டன், பணம் திரும்பி கொடுக்க சில நாட்கள் கால அவகாசம் வழங்கி காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக சோமுவிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். ஆனால், பணத்தை திரும்பி கொடுக்காமல் சோமு தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், வீட்டை வாங்கிய மணிகண்டன் சோமுவின் தாயாரின் உதவியுடன் பெனிலா மற்றும் குழந்தைகள் இல்லாத நேரத்தில் வீட்டில் குடியேற வந்துள்ளனர். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் மணிகண்டனை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து பெனிலாவுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு வந்த பெனிலா, வீட்டை விற்பனை செய்த விவரம் தங்களுக்கு தெரியாது என கூறியதோடு, காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளதால் குடியேறக் கூடாது என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மணிகண்டன், அவரது மனைவி மீனா மற்றும் சோமுவின் தாயார் சரோஜினி மூவரும் சோமுவின் வீட்டிற்குள் புகுந்து கதவை பூட்டி சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து வைத்து கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் 10 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் கதவை உடைத்து மூவரையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான சோமுவை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.