fbpx

என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில்!… மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடாக மாறியதன் பின்னணி!

தமிழர்களின் தாய்நிலமான தமிழ்நாடு, சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழர்கள் தாய்மண்ணுக்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் ஜூலை 18. இந்த நாள் தமிழ்நாடு நாளாக தமிழ்நாடு அரசால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. தலைநகரமான சென்னையை ஆங்கிலத்திலும் CHENNAI என்றே அழைக்க வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 1996ம் ஆண்டில் ஆணையிட்டார். தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அன்றைய நாளில் தமிழ்நாடு உருவான வரலாறு தொடர்பான சுவரொட்டிகளை பள்ளிகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தது.

நாடு விடுதலை அடைவதற்கு முன்னரும் விடுதலை அடைந்த பின்னரும் சென்னை மாகாணம், மெட்ராஸ் மாகாணம், மதராஸ் மாகாணம் என்பதுதான் நமது மாநிலத்துக்கு பெயர். மொழிவாரி மாநிலங்களாக நாட்டின் பல மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போதும் தமிழ்நாட்டுக்கு பழைய பெயர்கள்தான் தொடர்ந்தன. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நவம்பர் 1-ந் தேதியை கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மாநில உருவாக்க நாளாக கொண்டாடுகின்றன. ஆனால் நவம்பர் 1-ந் தேதி தமிழர்கள் கொண்டாட முடியாத அளவுக்கு சென்னை மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக இருந்த பல பகுதிகள் புதிய மாநிலங்களுடன் இணைந்தன. இருந்த போதும் பிற மாநிலங்களைப் போல நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

1956-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட கோரி தியாகி சங்கரலிங்கனார் 73 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி மரணத்தை தழுவினார். பின்னர் 1960, 1961-ல் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன 1962-ல் ராஜ்யசபாவில் பூபேஷ் குப்தா எம்.பி, சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என மாற்றம் செய்ய மசோதா தாக்கல் செய்தார். ஆனால் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. 1964-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபையில் திமுகவின் ராம. அரங்கண்ணல் எம்.எல்.ஏ. தமிழ்நாடு பெயர் சூட்டும் தீர்மானம் கொண்டுவந்தார். இத்தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து 1967-ம் ஆண்டு சரித்திரம் பிறந்தது. தமிழ்நாட்டில் முதல் முறையாக பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. பேரறிஞர் அண்ணா குறுகிய காலமே ஆட்சி செய்தவர். இருப்பினும், சங்கரலிங்கனாருக்கு கொடுத்த வாக்கை, 12 ஆண்டுகள் கழித்து நிறைவேற்றும் வாய்ப்பு அறிஞர் அண்ணாவுக்கு கிடைத்தது. தமிழ்நாடு பெயர் மாற்றத் தீரிமானத்தை நிறைவேற்றியபோது, ‘தமிழ்நாடு… தமிழ்நாடு… தமிழ்நாடு…” என மூன்று முறை முதலமைச்சர் அண்ணா முழங்கினார்.

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்கு பிறகு, 1956 நவம்பர் 1 ந் தேதி சென்னை மாநிலம் உள்ளிட்ட மாநிலங்கள் உருவாகின. தமிழ்மொழி பேசும் மக்கள் வாழக்கூடிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தின் விளைவாகத்தான் திருத்தணி வட்டமும், கன்னியாகுமரி மாவட்டமும் தமிழகத்தின் பகுதியாக இணைக்கப்பட்டு தற்போதுள்ள “தமிழ் மாநிலம்” உருவானது. மொழிவாரியாக உருவாக்கப்பட்ட தமிழ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட வேண்டுமென பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, இறுதியில் தமிழ்நாடு உருவானது என்பது வரலாறு.

Kokila

Next Post

தீவிரவாதிகளால் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை!… மணிப்பூரில் அடுத்தடுத்து பயங்கரம்!

Wed Nov 1 , 2023
மணிப்பூரில் தீவிரவாதிகளால் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரின் மோரே நகரில் சிங்தம் ஆனந்த் சப்-டிவிசனல் என்பவர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் மோரே நகரில் எல்லை பாதுகாப்பு படைக்காக ஹெலிகாப்டர்கள் தரையிறங்க ஏதுவாக ஹெலிபேட் வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஹெலிபேடை ஆய்வு செய்ய போலீஸ் அதிகாரி சென்றார். அப்போது அவர் மீது மர்மநபர்கள் பதுங்கி இருந்து துப்பாக்கியால் சுட்டு […]

You May Like