பிரதமர் மோடி தலைமையிலான அரசிடமிருந்து பலரது வாட்ஸ் அப்புக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இது தேர்தல் விதிமீறல் என்று காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு பிரதமர் மோடியின் கடிதம் இணைக்கப்பட்ட குறுந்தகவல், வாட்ஸ் அப் வழியாக பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
‘விக்சித் பாரத் சம்பார்க்’ என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள அந்த வாட்ஸ் அப் செய்தில், அரசாங்க திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து குடிமக்களிடமிருந்து கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கேட்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனுடன் பிரதமர் மோடியின் கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, ஆயுஷ்மான் பாரத் போன்ற பல திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை கேட்பதாக தெரிவித்தது.
இந்த வாட்ஸ் அப் செய்திக்கு கேரள மாநில காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எக்ஸ் தளத்தில், ”வாட்ச் அப் செய்தியில் தெரிவித்திருப்பதாவது கருத்து கேட்பது என்று, ஆனால் இருப்பதோ தேர்தல் பரப்புரை. வாட்ஸ் அப் கொள்கைப்படி, அரசியல் பரப்புரைகளை தடுப்பதாக கூறுகிறது. ஆனால், எப்படி தேர்தல் தொடர்பான பரபரப்புரைகளை வாட்ஸ் அப் எப்படி அனுமதிக்கிறது” எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.