கல்யாணம் முதல் காது குத்து சடங்கு கிரகப்பிரவேசம் என அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் மொய் வைக்கும் பழக்கம் தொன்று தொட்டே நம் தமிழர்களிடம் இருந்து வருகிறது. பொதுவாக எவ்வளவு ரூபாய் மொய் வைத்தாலும் அதோடு ஒரு ரூபாய் சேர்த்து மொய் வைப்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. உதாரணமாக 101, 1001,10001 என்றுதான் மொய் வைப்பார்கள். இது ஏன் என்று நாம் என்றாவது யோசித்திருக்கிறோமா.? இதற்கு என்ன காரணம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
கல்யாணம் மற்றும் எல்லா விசேஷங்களுக்கும் மொய் வைக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே கடைப்பிடித்து வருகிறோம். அவர்கள் மொய் வைத்தது போலவே இன்று நாமும் ஒற்றைப்படையில் மொய் வைத்து வருகிறோம். இதற்கான அர்த்தமுள்ள ஒரு காரணமும் இருக்கிறது. பண்டைய காலங்களில் ரூபாய் உலோகங்களில் இருந்தது தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களில் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தன.
இதனால் அந்தக் காலத்தில் உலோகங்களாலான நாணயங்களை முறையாக கொடுத்து வந்தார்கள். மேலும் பண்டைய காலத்தில் வராகன் என்ற நாணயம் முறை இருந்தது. இதற்கு 32 குண்டுமணி மதிப்பாகும். இந்த 32 குண்டு மணியும் 32 தர்மங்களை குறிக்கும் என நம்பப்படுகிறது. எனவே ஒருவர் மொய் வழங்கும் போது தான் தர்மத்தின் மூலம் ஈட்டிய பொருளை உங்களுக்கு கொடுக்கிறேன் நீங்களும் அதை தர்மமான வழியில் செலவு செய்யுங்கள் என குறிப்பதாக மொய் கொடுக்கப்பட்டது.
அதன் பிறகு காலப்போக்கில் நாணயங்கள் மாறி காகிதங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டாலும் உயிர் கொடுக்கும்போது பழைய சம்பிரதாயத்தின் படி உலோகத்தாலான நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் பழக்கம் தொடர்வதாக நம்பப்படுகிறது. காகிதம் என்னதான் மதிப்புள்ளதாக இருந்தாலும் ஒரு நாணயத்தின் மதிப்பிற்கு ஈடாகாது. இதன் காரணமாகவே ஒரு நாணயமும் சேர்த்து மொய் செய்யப்படுவதாக கூறுகிறார்கள். மேலும் 100, 500 என்று கொடுக்கும் போது அது முற்றுப்பெற்றதாக தோன்றுகிறது. அதேபோல் 101 51 என்றால் அது தொடர்பாக இருக்கிறது. எனவே இரு குடும்பங்களுக்குமான பந்தம் ஆண்டாண்டுகளுக்கு தொடர வேண்டும் என்பதை குறிக்கும் வகையிலும் இவ்வாறு மொய் செய்யப்படுவதாக தெரிவிக்கிறார்கள்.