திருச்சியில் தற்கொலை செய்துகொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை கடைசியாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்த லில்லி என்ற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், ஆசிரியையின் தற்கொலைக்கு காரணமாக இருந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ஆசிரியை லில்லி தற்கொலைக்கு செய்வதற்கு முன் தரப்பு வழக்கறிஞரிடம் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், பள்ளியில் 50 மாணவிகள், 50 மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர். மொத்தம் 6 ஸ்டாஃப்கள் பணியாற்றுகிறோம். அதில் நான் மட்டும்தான் பெண் ஆசிரியை. பள்ளி தலைமை ஆசிரியர் தினமும் பள்ளிக்கு லேட்டாகத்தான் வருவார். லேப் அசிஸ்டன்ட் பெண்ணும் தலைமை ஆசிரியருக்கு மிக நெருக்கம். இருவரும் லேட்டாகத்தான் வருவார்கள். ஆனால், நான் ஒருநாள் லேட்டாக சென்றபோது என்னை கடுமையாக தலைமை ஆசிரியர் திட்டினார். எனக்கு மட்டும்தான் நேரம் காலம் பார்க்கிறீர்கள் என்று நான் கேட்டபோது, என் மீது ஆத்திரமடைந்தார்.

இந்த சூழலில் ஆசிரியர் தினத்தன்று எங்களுக்கு தெரியாமல் மாணவ, மாணவிகளிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளனர். 4 ஆயிரம் ரூபாய் வரை வசூலாகியுள்ளது. ஏற்கனவே, 7ஆம் வகுப்பு மாணவி பார்ட்டி கொடுத்ததாக அவரது பெற்றோர் பள்ளிக்கு வந்து சண்டை போட்டார். அதில், இருந்து நாங்கள் எந்த பார்ட்டியும் நடத்துவதில்லை. இந்த சமயத்தில் எங்களுக்கே தெரியாமல் தலைமை ஆசிரியர் பணம் வசூல் செய்திருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. எங்களது பள்ளியில் மோகன்தாஸ் என்ற ஆசிரியர் வேலை பார்க்கிறார். அவருக்கு சரியாக கண் தெரியாது. அவர் மீது மாணவிகள் பாலியல் புகார் கொடுத்ததாக தலைமை ஆசிரியர் கூறினார். பாவம் அந்த ஆசிரியருக்கு 75% பார்வை குறைபாடு இருக்கிறது. அவருக்கு ஆதரவாக பேசிய நான் ஏதாவது ஆதாரம் உள்ளதா? என்று கேட்டேன். அதில், இருந்து என்னையும் இந்த வழக்கில் சேர்த்து விட்டனர்.
மோகன் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை நான் கண்டுக்காமல் விட்டதாகவும் கூறி எப்ஐஆரில் என் பெயரை சேர்த்துவிட்டனர். ஒருநாள் நான் விடுப்பில் இருந்தபோது மோகன்தாஸை போலீசார் கைது செய்துவிட்டதாக செய்தி அறிந்தேன். தலைமை ஆசிரியர் வேண்டுமென்றே என் மீது பழி சுமத்தியுள்ளார். அவர் அறைக்கு அடிக்கடி மாணவிகள் செல்வார்கள். அப்போது கதவு, ஜன்னலை மூடிவிடுவார்கள். உள்ளே என்ன நடக்கும் என்றே தெரியாது” என ஆசிரியை லில்லி வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.
வழக்கு விசாரணையில் இருப்பதால் இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் வழக்கில் இருந்து நீங்கள் விடுதலையானதும் வேறொரு பள்ளிக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் அந்த வழக்கறிஞர் அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால், கனத்த குரலுடன் போனை கட் செய்த ஆசிரியை லில்லி, கடைசியில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.