தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற மண்டல ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் முதல் பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ்நாட்டில் 75 சதவீதம் மக்களுக்கு பணியாற்றும் துறையாக நகராட்சி நிர்வாகத் துறை உள்ளது என்று குறிப்பிட்டார்.

கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்துக்கு 1,000 கோடி ரூபாயும், நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ.400 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.876 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் தமிழ்நாட்டில் சாலைகள், வடிகால், பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மின்மயானங்கள் அமைக்க கடந்த ஆண்டு 75 இடங்களும், நடப்பாண்டில் 7 இடங்களும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.