பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தேர்வு மையங்களில் 8.25 லட்சம் பேர் எழுதினர். இதில் 7,534 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 20,207 மாணவர்கள், 5,000 தனித் தேர்வர்கள் மற்றும் 187 சிறை கைதிகளும் அடங்குவர். ஏப்ரல் 6 முதல் 25ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெற்றது.
இதையடுத்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்பட இருக்கின்றன. மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) தேர்வு எழுதிய தேர்வர்களின் முடிவுகள் மே 14ஆம் தேதி அன்று காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட உள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தமிழ்நாட்டில் 94.56 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 10) வெளியிடப்பட்டன. அதில், 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் 14ஆம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Read More : 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லையா..? மாணவர்களே கவலை வேண்டாம்..!! இந்த தேர்வில் பாஸ் ஆகிடலாம்..!! தேதி அறிவிப்பு..!!