ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் விகாஸ் சங்வான் பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம நபர்கள், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், அவர்கள் ஒரு வாகனத்தில் ஏடிஎம் இயந்திரத்தை கட்டி இழுத்து, அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். அந்த ஏ.டி.எம்மில் ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், முகமூடி அணிந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏடிஎம் அருகே இருக்கும் சிசிடிவி கேமராவில், ஏடிஎம் இயந்திரம் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.