சொத்து குவிப்பு வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, சட்டப்பேரவை உறுப்பினர் தகுதியை பொன்முடி இழந்தார். இதையடுத்து, அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது.
பொன்முடி வகித்துவந்த உயர்கல்வி துறை அமைச்சர் பதவியை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதை ஏற்று, ஆளுநர் தனது ஒப்புதலை அளித்துள்ளார். திமுகவைச் சேர்ந்த ஓர் அமைச்சர் ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, அமைச்சர் பதவியை இழந்த முதல் நபர் பொன்முடி ஆவார்.
இதற்கு முன்பு தமிழக அரசியலில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி அதிமுகவில் இருந்த காலத்தில் செய்த ஊழல் வழக்கால் தண்டனை பெற்றிருந்தார். அதேநேரம் அமைச்சர் பதவியில் இருக்கும்போதே தகுதியிழப்பை சந்திக்கும் 3-வது எம்.எல்.ஏவாக பொன்முடி உள்ளார். இதற்கு முன்னதாக ஜெயலலிதாவும், அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் பதவியை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.