கே.ஆர். மார்க்கெட்டில் ஒருவர் பணத்தை வீசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கே.ஆர். மார்க்கெட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பணத்தை தூக்கி வீசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கருப்பு நிற உடை அணிந்த அந்த நபர், அவரது கழுத்தில் கடிகாரம் ஒன்றை தொங்க விட்டபடி, அவர் வைத்திருந்த பையில் இருந்து 10 ரூபாய் தாள்களை மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே வீசுகிறார். அந்த நபர் வீசிய பணத்தை எடுப்பதற்காக மக்கள் முண்டியடித்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பணத்தை வீசிய நபர் மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் எனவும் ஏன் அவ்வாறு செய்தார் என்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.