அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் சிறப்பு குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் யார் அந்த சார்? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் டிசம்பர் 23ஆம் தேதி, தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் ஆண் நண்பரை விரட்டி விட்டு, மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனில் பதிவு செய்து கொண்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக டிசம்பர் 24ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் (37) என்பவரை கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்துக்கும், சார் என்று அழைத்து ஞானசேகரன் போனில் பேசிய ஒருவருக்கும் தொடர்புள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. யார் அந்த சார்? என்பது தெரிய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மாணவி பாலியல் விவகாரம் மற்றும் அது தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம் குறித்து தனித்தனியாக விசாரித்து நடத்தியது.
இந்நிலையில், சிறப்பு குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் யார் அந்த சார்? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அண்ணா பல்கலையில் தனக்கு அதிகாரம் உள்ளது என்பதை காண்பிப்பதற்காகவும், மாணவியை அச்சுறுத்துவதற்காகவும் ஞானசேகரன் ‘சார்’ என அழைத்து ஒரு நபரிடம் பேசுவது போல் நடித்துள்ளார். இந்த குற்றத்தில் ஞானசேகரனுக்கு மட்டுமே தொடர்புள்ளது. இந்த குற்றத்தை அவர் மட்டுமே தனியாக செய்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.