அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து, காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். அவருக்கு உடல்நிலை அவ்வப்போது சரியில்லாமல் போவதால் கட்சி பணிகளில் தீவிரம் காட்ட முடியவில்லை. இதனால், கட்சியைப் பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
மேலும், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை அடுத்த 3 அல்லது 4 நாட்களில் வெளியிடப்படும். அதில், வேட்புமனு தாக்கல் மற்றும் திரும்பப் பெறுவதற்கான தேதிகளுடன் விரிவான அட்டவணை இருக்கும் என்று கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாகச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.