தற்போதைய தமிழக காவல்துறையின் இயக்குனராக இருக்கின்ற டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ம் தேதி உடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு உடனடியாக புதிய காவல்துறை இயக்குநரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே இந்த காவல்துறை தலைமை இயக்குனர் பதவியின் போட்டியில் தற்போதைய சென்னை மாநகர டிஜிபி சங்கர் ஜிவால் இருக்கிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதேநேரம் அவர் சென்னை மாநகர காவல் துறையை சரிவர பராமரிக்கவில்லை, சட்டம் ஒழுங்கை சரியாக பராமரிக்கவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன் வைக்கப்படுகிறது. ஆனால் செல்வாக்கு அதிகம் என்பதால் அடுத்த தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால்தான் என்ற அறிவிப்பு வரலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
இன்னொரு பக்கம் ஒருவேளை சங்கர் ஜிவால் காவல்துறை தலைமை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டால் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக அடுத்ததாக நியமிக்கப்படுவது யார்? என்று கேள்வி அனைவரின் மனதிலும் எழலாம்.
ஆனால் அந்த பதவிக்கு வர வேண்டும் என்று வெகு நாட்களாக ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார். அவர் தான் தற்போதைய தமிழக உளவுத்துறையின் டிஜிபியாக இருக்கின்ற டேவிட்சன் என்ற தகவலும் நம்முடைய காதுகளுக்கு வந்து செல்கிறது.
ஆனால் உளவுத்துறையை பொறுத்தவரையில் அவரும் சரியாக செயல்படவில்லை என்ற விமர்சனம் சமூக வலைதளங்களிலும் மேலும் பல்வேறு பத்திரிகையாளர்கள் மூலமாகவும் முன்வைக்கப்படுகிறது. இருந்தாலும் சங்கர் ஜிவால் போலவே இவருக்கும் கோட்டை வட்டாரத்தில் அதிக செல்வாக்கு காணப்படுகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தான் வரும் 30ஆம் தேதி உடன் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற உள்ளதால் அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அதிகாரிகள் டெல்லிக்கு செல்ல உள்ளனர்.
டெல்லிக்கு சென்று என்னதான் ஆய்வு மற்றும் ஆலோசனை நடத்தினாலும் கூட இறுதியில் கோட்டை வட்டாரம் தெரிவிக்கும் அந்த நபர்தான் தமிழக டிஜிபியாக வர முடியும் என்பதில் எந்த விட ஐயமும் இல்லை. அப்படி பார்த்தால் தமிழகத்தின் அடுத்த டிஜிபி சங்கர் ஜிவால் தான் என்பது சற்றேற குறைய உறுதி செய்யப்பட்டு விட்டதாகவே தகவல்கள் கிடைத்திருக்கின்றன ஆனாலும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதும் தெரியவில்லை.