குடும்ப தலைவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை எதற்கு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளுக்கு 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர். அவர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சேலம் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயதீசனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, “எத்தனையோ தேர்தல் வருகிறது. மாற்றம் என்பது சொல்லில் அல்ல; செயலில் காட்ட வேண்டும். ஆகச்சிறந்த கல்வியையும், தூய குடிநீரையும் இலவசமாக கொடுப்பது தான் மக்கள் நலன் சார்ந்த அரசியல். பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பது அல்ல.
விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மடிக்கணினியை தருகிறீர்கள். ஆனால் மக்களுக்கு இலவச குடிநீர் தர மறுப்பது ஏன்? முன்பெல்லாம், குடிப்பவர்களை பார்த்து காவலர்கள் கைது செய்தார்கள். ஆனால் இன்றோ மதுக்கடைகளை பாதுகாக்க டாஸ்மாக் கடைமுன்பு போலீசார் நிற்கிறார்கள். உங்கள் பணத்தை பறித்து உங்களுக்கு இலவசம் தருவார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. ஓட்டுக்கு பணம் வாங்குவது தன்மானத்தை அடமானம் வைப்பதற்கு சமம்” என பேசினார்.