பயணிகள் தவறான நடத்தை தொடர்பாக புகார் தெரிவிக்காததற்காக, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாரிஸில் இருந்து புது டெல்லிக்கு வந்த ஏர் இந்தியாவின் AI-142 விமானத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒரு சம்பவத்தில் ஒரு பயணி, விமான பணியாளர்களின் அறிவுரைகளை கேட்காமல் குடிபோதையில் கழிவறையில் புகைபிடித்ததால் பிடிபட்டார்.. மற்றொரு சம்பவத்தில் சக பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்றபோது அவரின் காலி இருக்கையை மற்றொரு பயணி பயன்படுத்தியதாக தெரிகிறது..
ஆனால் இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் புகார் தெரிவிக்கவில்லை என்பதால், அந்நிறுவனத்தின் பொறுப்பு மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.. இதுகுறித்து அந்நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.. நேற்று இந்த நோட்டிஸுக்கு ஏர் இந்தியா நிறுவனம் தனது பதிலை சமர்ப்பித்தது, அது ஆய்வு செய்யப்பட்டது..” என்று தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் வித்துள்ளது.. பயணிகளின் தவறான நடத்தை தொடர்பாக புகார் தெரிவிக்காததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
முன்னதாக நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் வயதான பெண் மீது சிறுநீர் கழித்த சம்பவத்தை புகாரளிக்காததற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ30 லட்சம் அபராதம் விதித்தது. மேலும் தனது கடமைகளை நிறைவேற்றத் தவறிய விமானியின் உரிமத்தையும் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்தது.
மூதாட்டி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் 4 மாதங்களுக்கு தடை விதித்துள்ளது. அவர் ஏற்கனவே விமான நிறுவனத்தின் ‘நோ ஃப்ளை லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளார்’ என்று ஏர் இந்தியா கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..