கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் காவலர்களுக்கு ஏன் சங்கம் இல்லை என மதுரை உயர் நீதிமன்றம் கேல்வி எழுப்பியுள்ளது.
காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை வார விடுமுறை என்ற அரசாணையை நடைமுறைபடுத்தக் கோரி காவலர் செந்தில்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், காவலர்கள் அதிக பணிச்சுமை காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாக கூறினார். மேலும், 2021-ஆம் ஆண்டு காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார். விசாரணையின் போது தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலர்களுக்கு சங்கங்கள் இருக்கும் நிலையில் காவல்துறைக்கு ஏன் சங்கங்கள் இல்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கேரளம், ஆதிரா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் இருக்கும் போது தமிழ்நாட்டில் ஏன் இல்லை எனவும் குறிப்பிட்டார். 2021இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லையெனில் அந்த அரசாணையும் விளம்பர நோக்கத்திற்காக பிறப்பிக்கப்பட்டது எனக் கூற இயலுமா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணை எந்த வகையில் பின்பற்றப்படுகிறது என்பது குறித்து தமிழக டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.