தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வார்த்தை ஜாலங்கள் நிறைந்த பட்ஜெட்டாகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றும் குற்றஞ்சாட்டினார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் கடன் உயர்ந்து, நிதி பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடன் வாங்குவதில் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சி சாலைகள் ஏதும் இதுவரை சரிசெய்யப்படவில்லை, கூடுதலாக வருவாய் இருந்தபோதிலும் எந்தவொரு புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. வரவு செலவு திட்டத்தில் பல்வேறு குளபடிகள் உள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்வதாகவும், இருக்கும் நிதியை வைத்து அதிமுக அரசு சிறப்பான ஆட்சி செய்ததாக கூறினார் .
அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
திமுக அரசின் கடனைப் பற்றிக் கவலைப்படும் பழனிசாமி, மோடி அரசின் கடனைப் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை..? 2014ல் மன்மோகன் சிங் ஆட்சியில் ரூ.54 லட்சம் கோடியாக இருந்த கடன், 10 ஆண்டுகளில் ரூ.205 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மோடி ஆட்சியில் நாட்டின் கடன் உயர்ந்துள்ளது பற்றிப் பேச பழனிசாமியின் வாய்க்கு யார் பூட்டு போட்டார்கள்..?
பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறும் பழனிசாமி, ஒன்றிய அரசின் கடனைப் பற்றிக் கர்ஜிக்க வேண்டியதுதானே. ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பத்தாண்டு கால ஆட்சியில் கடன் சுமை என்கிற தலைக்குனிவை போக்குவதற்கு பதிலாக ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடனை ஏற்றியதுதான் சாதனை. 2011-12 ல் 1 லட்சத்து 30 ஆயிரத்து 630 கோடியாக இருந்த கடனை 2020-21 ல் 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியாக உயர்த்தினீர்கள் என கூறினார்.