மகாராஷ்டிர மாநிலம் புனோவில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இம்தியாஸ் ஷேக் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு வட்டியில்லாமல் ரூ. 40 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கொடுக்கப்பட்ட இந்த கடன் தொகையை திருப்பி தருமாறு ஷேக் பலமுறை வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் சில காரணங்களால் கடன் வாங்கியவர்களால் அதனை சரியான நேரத்திற்கு திருப்பி செலுத்த முடியவில்லை.
இந்நிலையில் கணவன், மனைவி இருவரையும் அடியாட்கள் உதவியுடன் கடத்தி வந்து ஹதாப்சர் என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் தங்க வைத்துள்ளார் ஷேக். இருவரையும் ஷேக் கொடுமைப்படுத்திய நிலையில் கத்தியை காட்டி மிரட்டியிருக்கிறார். பணத்தை தராவிட்டால் அவரது மனைவி தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று இம்தியாஸ் ஷேக் மிரட்டியிருக்கிறார். இதற்கு கடன் வாங்கியவர் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, கத்தியை காட்டி மிரட்டிய ஷேக், கடன் வாங்கியவரின் மனைவியை அவர் முன்னேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்வத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இருவரும் ஹதாப்சர் காவல்நிலையத்தில் கடந்த செவ்வாய் அன்று புகார் அளித்தனர். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் குற்றம் சாட்டப்பட்டுள்ள இம்தியாஸ் ஷேக்கை கைது செய்துள்ளார்கள். .