அரசு வேலைக்கு ஆசைப்பட்டு காதல் கணவனை மனைவியே கொலை செய்துவிட்டு நாடகமாடிய நிலையில், பிரேத பரிசோதனையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் முக்ராந்த்பூர் கிராமத்தை சேர்ந்த தீபக் குமார் (29) என்பவர் கடந்த 2023ஆம் ஆண்டில் காதலி ஷிவானியை (27) திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் நஜிபாபாத்தில் வசித்து வந்த நிலையில், தீபக் ரயில்வேயில் தொழில்நுட்ப பணியாளராக வேலைபார்த்து வந்தார்.
இந்நிலையில், வீட்டில் நவராத்திரி கொண்டாட்டத்திற்கான நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இதில், கலந்து கொண்ட தீபக், திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது, தனது கணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக, அவரது குடும்பத்தினரிடம் மனைவி ஷிவானி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மற்றும் உறவினர்கள் இறுதிச் சடங்கு நடத்த ஏற்பாடு செய்தனர்.
ஆனால், தீபக் ஒரு அரசு ஊழியர் என்பதால், பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதையடுத்து, தீபக்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்த அறிக்கையில், தீபக் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீபக்கின் மனைவி ஷிவானியை கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீபக்கின் அரசு வேலையை பெறுவதற்காக ஷிவானி இந்த கொலையை அரங்கேற்றியுள்ளார் என்று தீபக்கின் சகோதரர் மற்றும் அவரது தாயார் குற்றம்சாட்டினர். மேலும், தீபக்கின் தாயாரை ஷிவானி பலமுறை அடித்து, சித்ரவதையும் செய்திருக்கிறார். ஆனால், இந்த கொலையை ஷிவானி மட்டுமே செய்திருக்க முடியாது என்றும் இதற்கு மற்றொரு நபர் உடந்தையாக இருந்திருக்கக் கூடும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Read More : BREAKING | ரெப்போ வட்டி விகிதம் 0.25%ஆக குறைப்பு..!! வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு..!!