நாள்தோறும் குடித்துவிட்டு வந்து தன்னை தொந்தரவு செய்த தாலி கட்டிய கணவனை கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த பெண்ணை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இருக்கின்ற புதூர் நாச்சியம்பாளையம் பகுதி சேர்ந்தவர் பாலு (63), இவருடைய மனைவி ஈஸ்வரி (58) இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் திருமணமாகி, அவரவர் கணவருடன் வசித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தான், இந்த தம்பதிகள் இருவரும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள நாமக்கல் பாளையத்தில் இருக்கின்ற ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தான், பாலு குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது. ஆகவே நாள்தோறும் அந்த பகுதியில் இருக்கின்ற பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து, அதில் வரும் பணத்தில் நாள்தோறும் குடித்து விட்டு வந்து தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்து, அவரை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
வழக்கம்போல கடந்த 30ஆம் தேதி இரவு போதையுடன் வீட்டிற்கு வந்த பாலு தன்னுடைய மனைவியிடம் தகராறு ஈடுபட்டிருக்கிறார். இதனால் ஆத்திரம் கொண்ட ஈஸ்வரி, வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து பாலுவை சரமாரியாக வெட்டியிருக்கிறார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பாலு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார், அதன் பிறகு ஈஸ்வரி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இந்த விவகாரம் குறித்து காவல்துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நேற்று இரவு ஈஸ்வரியை கைது செய்தனர். பின்பு அவரிடம் நடத்திய விசாரணையில், நாள்தோறும் குடிபோதையில் வந்து தன்னை அடித்து, உதைத்து துன்புறுத்தியதால் கணவனை கொலை செய்ததாக தெரிவித்த அவர், அவருடைய கொடுமை தாங்க முடியாமல் நானே அவரை கொலை செய்து விட்டேன் என்றும் கூறியிருக்கிறார். அதன்படி ஈஸ்வரியை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.