தமிழக அரசியலில் இருப்பதாக கருதப்படும் வெற்றிடத்தை, நிரப்புவதற்கான முதல் முயற்சியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. தமிழக அரசியலில் நீண்ட காலம் கோலோச்சிய முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பிறகு வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாகவே பலரும் கருதுகின்றனர்.
அதை வெளிப்படையாக கூறி, அதை நிரப்ப அரசியல் கட்சி தொடங்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். ஆனால், உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் அவரால் கட்சியை தொடங்க முடியவில்லை. அவர் சொன்ன வெற்றிடம் அப்படியே தான் இன்னும் இருக்கிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. அந்த இடத்தின் ஒரு பகுதியை, அண்ணாமலை வரவுக்குப் பிறகு பா.ஜ.க நிரப்பி இருக்கிறது. சீமான் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பி வருகிறார்.
அப்படியென்றால், வெற்றிடம் குறைந்திருக்க வேண்டும். ஆனால், நாளுக்கு நாள் பலவீனம் அடையும் அதிமுக தேர்தலுக்கு தேர்தல் சுருங்கிக் கொண்டே போகும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகளால் வெற்றிடம் விரிவடைந்து கொண்டு வருவதாக விஜய் எண்ணுகிறார். அந்த அடிப்படையில் தான் 2026இல் சட்டமன்ற தேர்தலை கணக்கு போட்டு, கட்சியை இப்போது தொடங்கியுள்ளார்.
ஒரே தேர்தலில் மொத்த தமிழர்களையும் வென்று ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்பது விஜயின் கணக்கு. தமிழ்நாட்டில் இதுவரை எம்ஜிஆர் மட்டுமே செய்து காட்டிய அந்த சரித்திர சாதனையை தானும் படைக்க வேண்டும் என்பது அவரது இலக்கு. அதை நோக்கிய அவரது பயணம், விக்கிரவாண்டியில் பிரமாண்ட மாநாட்டுடன் இன்று தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டும், எந்தவிதமான சர்ச்சைக்கும் இடம் தராமல் நற்பெயர் எடுக்கும் வகையில் நடத்த வேண்டும் என்று பார்த்துப் பார்த்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விஜயின் கட்சி, தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வெற்றிகளை குவிக்குமா, அதற்கு இந்த மாநாடு உதவியாக இருக்குமா? என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
Read More : சபரிமலை ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் தேங்காய் எடுத்து செல்ல விலக்கு…! மத்திய அரசு அறிவிப்பு