மதுரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் யாத்திரையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி காட்டப்பட்ட நிலையில், இதுகுறித்து அந்த அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய். தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்க ஆயத்தமாகி வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு மக்கள் நலப் பணிகளை அவரது ரசிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் 10, 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளுக்கு விஜய் பரிசுகளை வழங்கினார்.
சில வாரங்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர இலவச பாட சாலை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அண்மையில் இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியானது. இப்படி விஜய் மக்கள் நலத் திட்டங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக அரசியலை நோக்கி நகர்ந்து வருகிறார். இதுவரை எந்த கட்சிக்கு ஆதரவு என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. ஆனால், பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி படிக்க வேண்டும் என விஜய் தெரிவித்ததை வைத்து பார்க்கையில் சாதி, மத பாகுபாடுகளை கடந்த சமூக நீதி கொள்கை கொண்ட கட்சியை உருவாக்க விஜய் ஆயத்தமாகி வருவது தெரிகிறது.
இந்நிலையில், மதுரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண்… என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியுடன் சிலர் அதில் கலந்துகொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்க கொடியுடன் பாஜக அண்ணாமலைக்கு ஆதரவாக அவர்கள் முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ”தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை. அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.