விப்ரோ நிறுவனம் 800 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் கடந்த ஆண்டின் இறுதி முதலே ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. அந்த வகையில் இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, மோசமான செயல்திறன் காரணமாக நூற்றுக்கணக்கான புதிய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
பல கட்ட சோதனைகளுக்கு பிறகு 800 புதிய பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மோசமான செயல்முறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.. எனினும் பணி நீக்கம் செய்யப்பட்டோரின் எண்ணிக்கையை விப்ரோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை..
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அந்நிறுவனம் அனுப்பிய பணிநீக்க கடிதத்தில் ” ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க நிறுவனம் செலவிட்ட 75,000 செலுத்த வேண்டும்.. ஆனால் நீங்கள் செலுத்த வேண்டிய பயிற்சிச் செலவு ரூ.75,000/- தள்ளுபடி செய்யப்படும் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்,” என்று பணிநீக்கம் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விப்ரோவில் மோசமான செயல்திறன் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட நபர் இதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழிடம் பேசினார்.. அப்போது “ஜனவரி 2022 இல் எனக்கு ஒரு ஆஃபர் லெட்டர் கிடைத்தது, ஆனால் பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு அவர்கள் என்னை வேலைக்குச் சேர்த்தனர். தற்போது சோதனை என்ற பெயரில் அவர்கள் பணியை விட்டு நீக்கிவிட்டனர்..” என்று தெரிவித்தார்..
கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3-வது காலாண்டில், . ரூ.3,052.90 கோடி லாபம் ஈட்டியதாக அறிவித்திருந்தது.. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ. 2,969 கோடியாக இருந்தது.. இதனால் விப்ரோவின் ஆண்டு லாபம் 2.8 சதவீதம் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..