நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ளது ஊர்காடு. அங்குள்ள மேலக்காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் 30 வயதான பேச்சிமுத்து. இவருக்கு 28 வயதான சுதா என்ற மனைவி உள்ளார். அம்பை, புதுக்காலனி, மூடபள்ளம் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சுதாவிற்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த கணவர் பேச்சிமுத்து, தொடர்பை கைவிடும்படி கண்டித்துள்ளார்.
இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், சுதாவிற்கு தனது கள்ளத்தொடர்பை கைவிட மனம் இல்லை. இந்நிலையில் 2022ம் ஆண்டு, பிப்.2ம் தேதி இரவு 9 மணியளவில், பேச்சிமுத்து மது அருந்தி விட்டு வீட்டிற்க்கு வந்துள்ளார். அப்போது பேச்சிமுத்துவிற்கும் சுதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுதா, தனது சேலையால் கணவரின் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் மூச்சுத்திணறிய பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, பேச்சிமுத்துவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதற்குள் சுதா, தனது கணவரை கொலை செய்ய பயன்படுத்திய சேலையை மறைத்து வைத்துவிட்டார். மேலும், விசாரணைக்கு வந்த போலீசாரிடம் தனது கணவர் குளிர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் பிரேத பிரிசோதனையின் முடிவில், பேச்சிமுத்துவின் கழுத்து நெரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
விசாரணையில் உண்மை தெரிய வந்த நிலையில், போலீசார் சுதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், சுதாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Read more: BREAKING | ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றியது திமுக..!! 1,14,439 வாக்குகள் பெற்று அபார வெற்றி..!!