கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் மாகடியைச் சேர்ந்தவர் 46 வயது பெண். இவர், கடந்த 23ஆம் தேதி மாகடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ”எனது கணவர் பெயர் சோமேஷ்வரா. இவர், கடந்த 2020ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். 8 மாதங்கள் தவணை செலுத்தி வந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் நிதி நிறுவனத்தினர் பணம் கேட்டு எனக்கு நெருக்கடி கொடுத்தனர்.
அப்போது, எங்களுக்கு நீண்ட காலமாக பழக்கமான மஞ்சுநாத் (40) என்பவர், ஒரு சிறுநீரகத்தை விற்றால் ரூ.2.5 லட்சம் கிடைக்கும். அதன் மூலம் வரும் பணத்தில் கடனை அடைத்துவிடலாம். ஒரு சிறுநீரகத்தை வைத்து ஆரோக்கியமான வாழ முடியும்” என்று கூறியுள்ளார். அதன்படி, 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் எனது சிறுநீரகம் அகற்றப்பட்டது. அப்போது, மஞ்சுநாத் மூலமாக எனக்கு ரூ.2.5 லட்சம் தரப்பட்டது. ஆனால், அதில் ரூ.1.5 லட்சம் மட்டுமே எனக்கு கொடுத்தார். அந்தப் பணத்தை வைத்து தான் எனது கடனை அடைத்தேன்.
இந்நிலையில், மஞ்சுநாத் மீண்டும் என்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வருகிறார். பணம் தரவில்லை என்றால், திருமணமான என் 2 மகள்களின் சிறுநீரகத்தை விற்று பணம் தருமாறு கூறுகிறார். இதற்கு மறுத்ததால் கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, 52 வயதான மற்றொரு பெண் தன்னையும் மஞ்சுநாத் இதேபோல் சிறுநீரகத்தை விற்குமாறு மிரட்டியதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.