சேலம் மாவட்டம் வாய்க்கால்பட்டறை பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். தச்சுத்தொழிலாளியான இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், ஜோதி 4-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். இதையடுத்து, அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டையிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், ஜோதி 7 மாதம் கர்ப்பிணியாக இருந்த போது தான், அவர் தாய்மை அடைந்திருந்தது அவரது கணவருக்கு தெரியவந்ததாம். மேலும், இது குறித்து ஜோதியின் பெற்றோருக்கு கடைசி வரை தெரியாதாம். இந்த நிலையில், ஜோதியின் பெற்றோர் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஜோதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார்.
அப்போது அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தை இறந்துவிட்டது. இதனால் பதறிப்போன ஜோதி, பிறந்த குழந்தையின் சடலத்தை கட்டைப்பையில் போட்டு, பீரோவுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டார். இதனிடையே, வீட்டிற்க்கு வந்த பெற்றோர், அறை முழுவதும் ரத்தம் கிடப்பதையும், தங்களின் மகள் மயங்கி கிடப்பதையும் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அப்போது தான், ஜோதியின் பெற்றோருக்கு தங்களின் மகளுக்கு பிரசவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பிறந்த குழந்தை எங்கே என்று ஜோதியின் பெற்றோர் வீடு முழுவதும் தேடியுள்ளனர். அப்போது இறந்த குழந்தையை கட்டைப்பையில் போட்டு, பீரோவிற்கு அடியில் ஜோதி மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கட்டைப் பையில் இருந்த குழந்தையின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், ஜோதி, மற்றும் குழந்தையின் உடல்கள் வேலூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து அறிந்த ஆற்காடு காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.