பிரேசிலிய அமேசானில் உள்ள அவா பழங்குடியினர்கள் பாலின சம அந்தஸ்து இயல்பானது. அங்கு ஆண் பெண் என்ற பேதம் பார்ப்பதில்லை. அவா பழங்குடியின பெண்கள் வேட்டையாடும் பயணங்களில் ஆண்களுடன் சேர்ந்தே செல்கின்றனர். வடக்கு நைஜரில் உள்ள வொடாபே மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின் இறுதியில் ஆண்களுக்கான அழகுப் போட்டியை நடத்துகிறார்கள். இளைஞர்கள் ஒப்பனை செய்து நகைகள் மற்றும் சிறந்த ஆடைகளை அணிந்து, பெண்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரிசையில் நிற்கின்றனர்.
நமீபியா மற்றும் அங்கோலாவைச் சேர்ந்த ஹிம்பா பழங்குடியின பெண்கள் கொழுப்பு மற்றும் காவி கலவையான ஓட்ஜிஸ் பேஸ்ட் கொண்டு தோல் மற்றும் முடியை தண்ணீரின்றி சுத்தப்படுத்துகிறார்கள். இது கடுமையான பாலைவன காலநிலையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பயன்படுத்தப்படும் பட்டர்ஃபேட் மற்றும் ஓச்சர் நிறமியின் கலவையாகும். இதில் சேர்க்கப்படும் ஒமுஸும்பா என்னும் நறுமண பிசின் நல்ல வாசனையை கொடுப்பதோடு சருமத்திற்கு நல்ல அழகான ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஓட்ஜிஸ் பேஸ்ட் சூரியன் மற்றும் கொசுக் கடியிலிருந்தும் பாதுகாக்கிறது.
ஆனால் ஹிம்பா பழங்குடியின பெண்கள் அழகாக இருக்க இதை அணிவார்கள் என்று கூறுகிறார்கள். ஹிம்பா பெண்கள் பருவ வயதிலிருந்தே சிவப்பு களிமண்ணைப் பயன்படுத்தி தங்கள் தலைமுடியை வடிவமைக்கத் தொடங்குகிறார்கள். பாலைவன சூழலான அங்கு தண்ணீர் கிடைப்பது மிகவும் அரிதான காரணத்தால் ஓட்ஜிஸ் உடலை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது இறந்த செதில்கள், அழுக்கு மற்றும் இறந்த தோல் போன்றவற்றை நீக்குகிறது. முடியை கழுவ மர சாம்பல் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கு பப்புவாவில் உள்ள பலியம் பள்ளத்தாக்கு டானி பழங்குடியின மக்களின் தாயகமாகும். அவர்கள் குறைந்தது 9,000 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் குகு யிமித்திர் பழங்குடியின மக்களுக்கு பாரம்பரியமாக இடது மற்றும் வலது என்பதற்கு வார்த்தைகள் இல்லை. இவர்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என திசையை மட்டுமே இடது வலதிற்கு பதிலாக பயன்படுத்தினர். பங்களாதேஷின் ஜும்மா பழங்குடியின மக்கள் விவசாயம் செய்யும் முறை மிகவும் வித்தியாசமானது. இவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்வதற்கு முன்னர் தாங்கள் இருந்த இடத்தில் நிலத்தில் வெவ்வேறு பயிர்களை கலவையாக விதைக்கிறார்கள். இவர்கள் திரும்ப அந்த இடத்திற்கு வரும் பொழுது ஒரே நிலத்தில் எல்லாவித தாவரங்களும் வளர்ந்திருக்கும்.
மேற்கு பப்புவாவில் உள்ள சில பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆண்கள் பாரம்பரியமாக ஜென்டாருஸ்ஸா என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தேநீரைக் குடித்து வருகின்றனர். இது கருத்தடையை ஏற்படுத்துமாம். ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை இந்த தாவரத்திலிருந்து தயாரிக்க முடியுமா என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். மலேரியா உலகின் மிக கொடிய நோய்களில் ஒன்றாகும். சின்கோனா மரங்களின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் குயினின் மலேரியாவை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டது. இந்த குயினின் முதன்முதலில் பெரு, பொலிவியா மற்றும் ஈக்வடார் போன்ற பழங்குடியின மக்களால் தசையை தளர்வடையச் செய்ய மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்பட்டது.