பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். விண்ணப்பப் பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது .
முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் 04.08.2023 அன்று நிறைவடைய உள்ள நிலையில் இந்த முதற்கட்ட முகாமில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது.
நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 2,63,472 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த முதற்கட்ட முகாம் நடைபெறும் பகுதிகளில் இதுவரை விண்ணப்பிக்காத நபர்கள் இன்று நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்த வேண்டும். இதுவரை முதற்கட்ட முகாமில் 79.66 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட முகாம்கள்05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளன.