நடப்பாண்டுக்கான மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி ராஞ்சியில் இன்று தொடங்க உள்ளது.
ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டி, நவம்பர் 5ம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் லீக் அடிப்படையில் மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.
அந்தவகையில் தொடக்க நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் ஜப்பான்-மலேசியா (மாலை 4 மணி), அடுத்த ஆட்டத்தில் சீனா-தென்கொரியா (மாலை 6:15 மணி) மோதுகின்றன. 3-வது லீக் ஆட்டத்தில் கோல் கீப்பர் சவிதா தலைமையிலான இந்திய அணி, தாய்லாந்தை (இரவு 8 மணி) சந்திக்கிறது. அதைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமையன்று மலேசியாவுடன் மோதுகிறது. அதன்பிறகு, அக்டோபர் 30, 2023 திங்கட்கிழமை அவர்கள் மூன்றாவது ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது. பின்னர் செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 31, 2023 அன்று ஜப்பானுக்கு எதிராக போட்டியிடுகிறது. அணியின் இறுதிப் போட்டி நவம்பர் 2, வியாழன் அன்று கொரியாவுக்கு எதிராக இருக்கும், அதைத் தொடர்ந்து நாக் அவுட் நிலை ஆட்டங்கள் நடைபெறும்.இந்தப் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
2016 ஆம் ஆண்டு முந்தைய வெற்றிகளுடன், இரண்டாவது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை உறுதிசெய்யும் நோக்கத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்படுகிறது. எனவே, இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.