மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களில் இரண்டரை லட்சம் பேரை ‘தமிழ் மகள்’ திட்டத்தில் இணைக்க கூட்டுறவு துறை இலக்கு நிர்ணயம்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்த, கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ என்றும் பெயரிட்டார். முதலில் ஒரு கோடி பேர் என இலக்கு நிர்ணயித்தாலும், அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிகளுக்குள் வரும் அனைவரையும் பயனாளர்களாக இணைக்க முடிவெடுக்கப்பட்டது.
முதலில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே பயனாளர்களாக இருந்த நிலையில் அடுத்தடுத்து விண்ணப்பித்தவர்களும் பயனாளர்களாக இணைக்கப்பட்டு வருகின்றனர். நிராகரிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்ய வழிவகைகள் செய்யப்பட்டன. அடுத்தடுத்த மாதங்களில் பலரும் இணைக்கப்பட்டதால் பயனாளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சம் ஆனது. இத்திட்டத்தில், தமிழகத்தில் 106 முகாம்களில் உள்ள 19,487 இலங்கை தமிழர்களின் குடும்பத்தை சேர்ந்த குடும்பத் தலைவிகளும் இணைக்கப்பட்டனர்.
மாதம் தோறும் உரிமைத் தொகையாக ரூ.1,000 அரசாங்கத்திடம் இருந்து வரவு வைக்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை உள்பட தங்கள் பணத்தை அப்படியே சேமிக்க விரும்பும் பெண்களுக்காக கூட்டுறவு வங்கிகளில் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘தமிழ் மகள்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தொடர் வைப்புத்தொகை செலுத்துபவர்களுக்கு 8 சதவீதம் வட்டி கூட்டுறவுத்துறையால் வழங்கப்படுகிறது. வரும் 2025 மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு மகளிர் உரிமைத் தொகை பெறும் 8 லட்சத்து 20 ஆயிரம் பெண்களில் இரண்டரை லட்சம் பேரை ‘தமிழ் மகள்’ திட்டத்தில் இணைக்க கூட்டுறவு துறை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
மகளிர் உரிமைத் தொகைக்காக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் அரசாங்கம் வழங்கும் உரிமைத் தொகையானது வட்டியில்லா சுழற்சி நிதியாக எங்களுக்கு மாதம் தோறும் கூட்டுறவு வங்கிகளுக்கு கிடைத்து வருகிறது. இப்படி கூட்டுறவு வங்கிகளில் வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகைக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் கூட்டுறவுத் துறைக்கு மாதம் தோறும் ரூ.82 கோடி வட்டியில்லா சுழற்சி வருவாயாக வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.