மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணியின் இஸ்ஸி வோங் பெற்றார்.
மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் எலிமினேட்டர் சுற்று, மும்பையில் நடைபெற்றது. இதில், உ.பி. வாரியர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற உத்தரப் பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய நாட் ஸ்கிவர்-பிரண்ட், 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 38 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணி, தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் பவுண்டரி, சிக்ஸர் என அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிரண் நவ்கிரே 43 ரன் எடுத்தபோது மும்பை வேகப்பந்து வீச்சாளர் வோங் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இதுமட்டுமில்லாமல் சிம்ரன் ஷேக், சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோரின் விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து வீழ்த்தி, மகளிர் ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையை இஸ்ஸி வோங் பெற்றார்.