மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்தது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா முதலிடத்தையும், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்தையும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், ஆஸ்திரேலியா, இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அந்த அணியில் பெத் மூனி சிறப்பாக ஆடி 37 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 54 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் மெக் லானிங் ஆட்டமிழக்காமல் 49 ரன்களும், ஆஷ்லே கார்ட்னர் 31 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஷிகா பாண்டே 2 விக்கெட்களையும், ராதா யாதவ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஷபாலி வர்மாவும் 9 ரன்களில் நடையைக் கட்டினார். தொடர்ந்து களமிறங்கிய யாஷ்திகா பாத்தியாவும் 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால், இந்திய அணி தொடக்கம் முதலே தத்தளிக்கத் தொடங்கியது. இருந்தாலும் அணியை சரிவிலிருந்து மீட்க கேப்டன் ஹவுரும் ஜெமிமா ரோட்ரிக்ஸும் போராடினர். என்றாலும் 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த ஜெமிமா, டார்சி பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.
மறுமுனையில் அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஹவுர் 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அவர்கள் இருவரும் வெளியேறிய பிறகு, அணியின் ரன்வேட்டையும் தொய்வடைந்தது. பின்னர் வந்த வீராங்கனைகளுக்கும் பதற்றம் அதிகரிக்கவே, அவசரகதியாக விக்கெட்டைகளை இழந்தனர். ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும் மறுபுறம் வெற்றியை நோக்கிப் போராடினர். கடைசி நேரத்தில் அதிரடியாய் ஆடிய தீப்தி ஷர்மா, ஆஸ்திரேலிய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறாத அளவுக்கு இந்திய அணியைக் கொண்டு சென்றார். அவருடைய ஆட்டத்தால் இறுதியில் இந்திய அணி ஜெயித்துவிடும் என்றே ரசிகர்கள் நம்பினர். இறுதியில் இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த அணி, இன்று வெற்றி பெறும் (தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து) அணியுடன் இறுதியாட்டத்தில் மோதும். கடந்த 2020 உலகக்கோப்பையில் இறுதி போட்டிவரை இந்திய அணி இந்த முறை அரையிறுதியிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்திருக்கிறது.