ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரில், இந்திய அணிதான் கோப்பை வெல்லும் என ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று அசைக்க முடியாத அணியாக இருந்தும், பைனலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோற்று, கோப்பையை இழந்தது. இதன்மூலம், 2013-ல் இருந்து ஐசிசி கோப்பைக்கான கனவு நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஒருநாள் உலகக் கோப்பை தற்போது முடிந்துள்ள நிலையில், அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் டி20 உலகக் கோப்பை தொடர், அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது.
இதற்குமுன், கடந்த வருடத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்து, இந்திய டி20 அணியில் இளம் வீரர்கள்தான் அதிகம் விளையாடி வருகிறார்கள். டி20 உலகக் கோப்பை 2022 தொடர் முடிந்தப் பிறகு ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. அவர்கள் நிச்சயம் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் விளையாட வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்றவர்கள் இனி டி20 அணியில் இடம்பெற மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அஸ்வின் போன்ற சீனியர்களுக்கும் இனி இந்திய டி20 அணியில் விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் ஷர்மாவுக்கு மாற்றாக யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கோலிக்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
36 வயதாகும் ரோஹித் ஷர்மா, இனி டி20 அணியில் தன்னை சேர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை எனத் தேர்வுக்குழுவிடம் ஓபனாக பேசியிருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ரோஹித் ஷர்மா ஒரு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி டி20 அணியில் நீங்கள் விளையாட மாட்டீர்களா என பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் ஷர்மாவிடம் கேட்டபோது, அதற்கு பதிலளித்த ரோஹித், ”டி20 உலகக் கோப்பை 2024 தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என அதிரடியாக பதிலளித்துள்ளார். இதன்மூலம், ரோஹித் ஷர்மா விரைவில், மீண்டும் டி20 அணியில் இடம்பெற்று, தொடர்ந்து விளையாடுவார் எனக் கருதப்படுகிறது.