ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 86 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் 42 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மற்றவீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் பந்துவீச்சாளர் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் மிட்செல் சாண்ட்னெர் மற்றும் பிலிப்ஸ் தல 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தது. குறிப்பாக டேவன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திர வெறியாட்டம் ஆடினர். 10ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த நியூஸிலாந்து அணியை இருவரும் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். டேவன் கான்வே 121 பந்துகளில் 152 ரன்களும், ரச்சின் ரவீந்திர 96 பந்துகளில் 123 ரன்களும் எடுத்து அட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து அணி 36.2 ஓவர்களில் 283 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணியை வீழ்த்தி உலகக்கோப்பை 2023ல் முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது. குறிப்பாக நியூஸிலாந்து அணியின் ஆட்டம் 2019 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்திற்கு பழிதீர்த்தது போல் அமைந்தது.