இந்தாண்டுக்கான (2023) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் எதிர்கொள்கின்றன. 2023 ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், உலகக் கோப்பையின் 13-வது எடிஷன் ஆகும். இது ஐசிசியால் ஏற்பாடு செய்யப்படும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியாகும்.
இந்தமுறை இந்தியாவில் நடத்தப்படுகிறது. 2023 உலகக்கோப்பை தொடர், முதலில் பிப்ரவரி முதல் மார்ச் 2023 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. 2019 நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. 1987, 1996 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் பிற நாடுகளுடன் இணைந்து போட்டியை நடத்திய இந்தியா, இம்முறை முழுமையாக தனித்து நடத்தும் உலகக் கோப்பை இதுவாகும். இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19, 2023 அன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில், 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ள நிலையில், உலகக்கோப்பை டிராஃபி பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதாவது உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் பொதுமக்களின் பார்வைக்காக டிராஃபி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.