பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், துன்புறுத்தல்கள், வன்கொடுமைகள் நித்தமும் நடந்தேறி கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், பொதுவெளி உட்பட காணும் இடமெல்லாம் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதே வேளையில் கட்டிய மனைவியே ஆயினும் அவர்களின் கண்ணியத்திற்கு குறைவை ஏற்படுத்தும் வகையிலான செயலில் எந்த ஆணும் ஈடுபட கூடாது என்ற சொல்லிக்கொடுத்து வளர்க்க இந்த சமூகம் தொடர்ந்து தவிர்த்து வருவதன் விளைவுதான் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்கொடுமை சம்பவங்களுக்கு அத்தாட்சியாக இருக்கிறது.

இப்படி இருக்கையில் லிஃப்டில் தனியாக பயணித்த பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்ட நபருக்கு தக்க பாடம் கற்பிக்கும் விதமாக கொடுத்த பதிலடி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அதன்படி, வெறும் 31 நொடிகளே கொண்ட அந்த வீடியோவில், லிஃப்டில் தனியாக இருந்த அந்த பெண்ணிடம் ஒருவர், அத்துமீற முயற்சிக்கிறார். ஆனால், அந்த பெண் நகர்ந்து நிற்கிறார். மீண்டும் அவரை அந்த நபர் பின்னால் இருந்தபடி நெருங்கவே, திரும்பி கண்ணத்தில் ஒரு அரை கொடுத்ததோடு அந்த நபரின் அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்திருக்கிறார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் லிஃப்டில் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டியதோடு, அந்த நபர் இந்த பதிலடிக்கு முழுக்க முழுக்க தகுதியானவர்தான் என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.